குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை

குற்ற வழக்குகளை முடித்து வைக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், ஏட்டு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அணாநகர் நடுவன்கரை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ்பாபு. இவர் மீது, சொத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த 2008-ம் ஆண்டு, 2 குற்ற வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை சிவில் பிரச்சினை எனக்கூறி முடித்து விடுவதாக கூறி, அப்போதைய மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த ரஷ்கின் என்பவர் ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து அபினேஷ்பாபு, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, 2008 ம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி அபினேஷ்பாபு லஞ்ச பணத்தை கொடுத்த போது, ஆய்வாளர் ரஷ்கின், ஏட்டு மோகன் ஆகிய இருவரும் கையும் களவுமாக சிக்கி கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா, ஆய்வாளர் ரஷ்கின், ஏட்டு மோகன் ஆகியோர் மீதான லஞ்ச குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.