Bloodstains Clever Cab Driver How CEO Accused Of Son Murder Was Caught | Crime: நாட்டையே உலுக்கிய சி.இ.ஓ! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்

கர்நாடகாவில் பயங்கரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). இவர் தனது 4 வயது மகனுடன் கோவாவிற்கு ஜனவரி 6ஆம் தேதி வந்திருந்தார். வடக்கு கோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனுடன் தங்கி இருக்கிறார். கடந்த 6ஆம் தேதி கோவாவிற்கு வந்த சுசனா, இரண்டு நாட்களுக்கு பிறகு பெங்களூரு செல்ல தயாராக இருந்தார்.
இதனால், ஹோட்டல் ஊழியரை அழைத்து டாக்சி புக் செய்து தர வேண்டும் கேட்டிருக்கிறார். சாலை வழியாக சென்றால் பெங்களூருவுக்கு 12 மணி நேரம் ஆகும். இதனால், விமானத்தில் செல்லும்படி ஹோட்டல் ஊழியர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், அந்த பெண் டாக்கிசியில் தான் செல்வேன் என்று கூறினார்.
இதனை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் டாக்சி புக் செய்து அனுப்பினர். அவர் செல்லும்போது அவருடன் மகன் இல்லை.  பெண் சுசனா ஹோட்டலில் இருந்து வெளியேறியதும், அவர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய ஹோட்டல் ஊழியர் சென்றிருக்கிறார்.  அப்போது, அங்கு ரத்தக்கறை படிந்திருந்தது. உடனே, ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 வயது மகனை கொன்ற தாய்:
இதனை அடுத்து, பெண் சுசனா சென்ற கார் ஓட்டுநரின் போன் நம்பரை  ஹோட்டல் ஊழியர்கள் வாங்கி அவரிடம் போலீசார் பேசினர்.  காரில் இருக்கும் பெண்ணிடம் குழந்தை பற்றி கேளுங்கள் என்று போலீசார் கூறினர். அந்த கார் ஓட்டுநர் கேட்க, உறவினர் விட்டில் குழந்தை இருப்பதாக பெண் சுசனா கூறினார்.
மேலும், குழந்தை இருக்கும் முகவரியும் கொடுத்திருக்கிறார். அங்கு சென்ற போலீசார் இந்த முகவரி போலியானது என்று தெரியவந்தது.  இதனை அடுத்து, மீண்டும் கார் ஓட்டுநருக்கு போன் செய்த போலீசார்,  பெண்ணிற்கு தெரியக்கூடாது என்பதற்காக கொங்கனி மொழியில் பேசினர்.
காரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு  செல்லுங்கள் என்று ஓட்டுநரின் கூறியிருக்கின்றனர். பெங்களூருவில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள சித்ரதுர்கா காவல் நிலையத்தில் கார் வந்தடைந்தது. இதனை அடுத்து, காரில் இருந்து பேக்கை போலீசார் சோதனை செய்தபோது, நான்கு வயது மகன் உடல் இருந்தது தெரியவந்தது.
சிக்கியது எப்படி?
இதனை அடுத்து, அந்த பெண் சுசனாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது, 4 வயது குழந்தையை கொன்று பேக் ஒன்றில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, பெண் சுசனாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், உயிரிழந்த 4 வயது குழந்தையின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 
2010ல் சுசனாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் இந்தோனேசியாவில் தற்போது இருக்கிறார். 2019ல் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது. சுசனா கடந்த 2020ல் கணவரை விவாகரத்து செய்தார். அப்போது, குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவரக்கு கோர்ட் அனுமதி அளித்தது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசனா விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால், குழந்தையுடன் கோவாவிற்கு அழைத்து சென்றிருப்பதாக தெரிகிறது.  இருப்பினும்., எந்த காரணத்திற்கு கொலை செய்தார் என்று உறுதியான தகவல் வெளியாகவில்லை.
யார் இந்த சுசனா சேத்?
பெங்களூருவில் ஒரு ஏஐ நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். இந்த ஏஐ நிறுவனம் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு முன் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணியாற்றினார் சுசனா.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா இயற்பியல் மாஸ்டர் பட்டம் பெற்றவர். ராமகிருஷ்ணா மிஷனில் சமஸ்கிருதத்தில் முதுகலை டிப்ளமோவில் முதல் ரேங்க் பெற்றவர். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 பேரில் ஒருவர் சுசனா சேத் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link