நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்:
ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்து தேர்வு செய்வார்கள். கர்நாடக மாநிலத்தில் ராஜ்ய சபா எம்.பி.யாக காங்கிரசைச் சேர்ந்த சையத் நாசர் ஹூசைன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதாக மாலை 7 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
அவர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அப்போது, அவரது ஆதரவாளர்களில் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டமன்ற வளாகத்திலே பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை அங்கிருந்தவர்களுக்கு ஏற்படுத்தியது.
பா.ஜ.க. புகார்:
இதையடுத்து, கர்நாடக பா.ஜ.க. கொறடா தோடண்ணகவுடா பட்டீல், எம்.எல்.சி. ரவிக்குமார் விதானா சவுதா காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர். பின்னர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒய். பரத் ஷெட்டி கூறியதாவது, “எங்கள் வேட்பாளர் தேர்வானதைத் தொடர்ந்து, நாங்கள் பாரத் மாதா கீ ஜே என்றும், சிவாஜி மகாராஜா கீ ஜே என்றும் கோஷங்களை எழுப்பினோம். அப்போது, ஹூசைனின் ஆதரவாளர்கள் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டத்தை நான் கேட்டேன்” என்று கூறியுள்ளார்.
பெரும் பரபரப்பு:
காங்கிரஸ் எம்.பி.யின் ஆதரவாளர்களின் செயல் குறித்து பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா இந்த விவகாரத்திற்கு பின்னால் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டமன்றத்திலே பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய விவகாரத்தை மக்களவைத் தேர்தல் பரப்புரையில் பெரிதுப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. டி.எஸ்.சோம சங்கர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக வாக்கு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் கர்நாடகாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: PM Modi: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி – பலத்த பாதுகாப்பு
மேலும் படிக்க: அடுத்த ட்விஸ்ட்க்கு ரெடியாகுங்க! இமாச்சல பிரதேசத்தில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு?
மேலும் காண