அடுத்த மாத தொடக்கத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக பல நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்தார்.
அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. வட மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக தென் மாநிலங்களில் கூட்டணியை பலப்படுத்த பாஜக தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இப்படியிருக்க, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம், ஜன சேனா ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
25 மக்களவை தொகுதிகளில் மூன்றில் ஜன சேனா களம் இறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள தொகுதிகளில் தெலுங்கு தேசமும் பாஜகவும் களமிறங்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுடன் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான தகவல்களின் அடிப்படையில், ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக, ஜனசேனா கட்சிக்கு சேர்த்து 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தங்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க கோரி கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விசாகப்பட்டினம், விஜயவாடா, அரக்கு, ராஜம்பேட்டை, ராஜமுந்திரி, திருப்பதி உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டி வருவதாகவும் ஆனால், அதற்கு தெலங்கு தேசம் ஒப்பு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் 370 இடங்களில் வெல்ல பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. அந்த வகையில், ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் காண