Bigg Boss 7 Tamil Title Winner Archana Overall Journey Struggles BBS7 | Bigg Boss 7 Tamil Title Winner; வைல்டு கார்டு எண்ட்ரி; ஒருமுறை கூட கேப்டன் இல்லை; டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள ரசிகர்கள் தொடங்கி  பிரபலங்கள் வரை அனைவரது மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில் வின்னர் அர்ச்சனா குறித்துதான். வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்து மக்களின் மனதை வென்று இந்த டைட்டிலை வென்றுள்ளார். இதுவரை நடந்த சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று டைட்டிலை வென்றவர் என்றால் அது அர்ச்சனா மட்டும்தான். இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஃபினாலேவுக்கு தகுதி பெற்றவர்கள் உள்ளனர். ஆனால் டைட்டில் வென்றவர் இல்லை. 

அர்ச்சனா கடந்து வந்த பாதை
வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஒருவர் டைட்டிலை தட்டித்தூக்கியுள்ளார் என்றால் அவர் கடந்து வந்த பாதை குறித்து கட்டாயம் திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. இந்த சீசன் தொடங்கி 28வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 5 போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் சென்றவர் அர்ச்சனா. இவர் வீட்டிற்குள் சென்றபோது இந்த சீசனின் மிகவும் டஃப் ப்ளேயர்கள் என்ற பார்வையை ஏற்படுத்தியிருந்தனர்  பிரதீப் ஆண்டனி, மாயா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்ட போட்டியாளர்கள். அர்ச்சனா வீட்டிற்குள் சென்றபோது அவருக்கு ரெட் கார்பெட் வரவேற்பெல்லாம் ஹவுஸ்மேட்ஸால் வழங்கப்படவில்லை. அர்ச்சனா வீட்டிற்குள் வந்தபோது கேப்டனாக இருந்தது பூர்ணிமா.
பூர்ணிமா பிக்பாஸ் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை கேப்டனான முதல் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நேரம் அது. ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் வந்தவர்களை திட்டமிட்டு ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது மட்டும் இல்லாமல் அவருக்கு நடைபெற்ற தாக்குதல்களில் பங்கு வகித்தார் பூர்ணிமா. பூர்ணிமாவின் பிக்பாஸ் கிராஃப் சரியத் தொடங்கியது இந்த இடத்தில்தான். 

அட்டாக் செய்த கேங்
வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அர்ச்சனாவுக்கு இது மிகவும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் திட்டமிட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அடைக்கப்பட்டதை சற்றும் எதிர்ப்பார்க்காத அர்ச்சனா மனவருத்தத்திற்கு ஆளானார். இதனால் அவர் மருத்துவரை அணுக வேண்டிய நிலைக்கு ஆளானார். இதனை மற்ற போட்டியாளர்கள் அர்ச்சனாவுடன் பிரச்னைகள் ஏற்படும்போது, “ ஏய் அழப்போகலயா? ஏய் டாக்டர்ட்ட போகலயா” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை அட்டாக் செய்து வந்தனர்.
முதல் வாரத்தில் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை அதிர்ச்சியுடனே கடந்த அர்ச்சனா, இரண்டாவது வாரத்தில் மாயாவின் கேப்டன்சியில் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளானார். அந்த வாரத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பப்பட்டார். அப்போது பிரதீப்புக்கு அர்ச்சனா ரெட் கார்டு கொடுக்கவில்லை. இதுமட்டும் இல்லாமல் பிரதீப்புக்காக வீட்டில் ஆதரவுக் குரல் எழுப்பினார். இதனால் கேப்டனாக இருந்த மாயா, தனது கேப்டன் பொறுப்புக்கான அறத்துடன் நடந்துகொள்ளாமல் அர்ச்சனாவையும் பிரதீப் மற்றும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசிய விசித்ராவையும் அட்டாக் செய்தார்.
மாயாவுடன் பூர்ணிமா, ஐஷு, நிக்சன், ஜோவிகா மற்றும் அக்‌ஷயா ஆகியோர் அர்ச்சனாவிடம் சண்டைக்குப் பாய்ந்தார்கள். கேமராக்கள் இல்லை என்றால் அர்ச்சனாவை அடித்தே விடுவார்கள்போல என ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு நடந்துகொண்டார்கள். இதனைப் பார்க்கும்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அர்ச்சனாவுக்கு மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் செய்வது நியாயமே இல்லை என்ற கோணத்தை உண்டாக்கியது. அதேநேரத்தில் ஒரு வீட்டிற்குள் அனைவரும் இணைந்து வாழவேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு வேலை என பகிர்ந்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பெரும்பான்மையான இடங்களில் அர்ச்சனா ஒத்துப்போகவில்லை. 

ஓரளவுக்குத்தான் பொறுமை
இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அர்ச்சனாவை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களின் ஆதரவு அர்ச்சனாவுக்கு பெரும்பான்மையாக இருந்ததால் அவர் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்தார்.  மாயா, பூர்ணிமா ஆகியோரை வெளியில் இருந்த பிக்பாஸ் ரசிகர்களே ”புல்லி கேங்” என குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அர்ச்சனா செல்லக்கூடாது எனவும், சென்று வந்த பின்னர் அதில் இல்லாத பொருட்களுக்கு அர்ச்சனாதான் காரணம் கூறி தொடர்ந்து அட்டாக் செய்தனர் அந்த புல்லி கேங் என ரசிகர்களால் பெயரிடப்பட்ட போட்டியாளர்கள்.
தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்து வந்த அர்ச்சனா மூன்றாவது வாரத்தில் இருந்து ஏறி அடிக்க ஆரம்பித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத புல்லி கேங் அர்ச்சனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அர்ச்சனாவிடம் நாம் சண்டையிட்டால் அது தங்களுக்குத்தான் பேக் ஃபையர் ஆகும் என புரிந்துகொண்டதால் அனைவரும் அமைதியாகிவிட்டனர். இதனை உணர்ந்த அர்ச்சனா தனது கேம் ப்ளானையே மாற்றிக்கொண்டார்.  அதுவரை பெண்களிடம் சண்டையிட்டு வந்த அர்ச்சனா அதன்பின்னர் விஷ்ணு, தினேஷ் மற்றும் நிக்சன் உள்ளிட்டோரிடம் சண்டைகட்ட ஆரம்பித்தார். இதில் விஷ்ணு அர்ச்சனாவை எதாவது சொல்லிக்கொண்டே இருந்தார், இதனால் அர்ச்சனாவுக்கும் விஷ்ணுவுக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையிலான பிரச்னை பூதாகரமாக மாறவில்லை. அதாவது தொகுப்பாளர் கமல்ஹாசன் வரை வரவில்லை. 

டாஸ்க்குகளில் வெறித்தனம்
இவையெல்லாம் இப்படி இருந்தாலும், அர்ச்சனா தனக்கு பிக்பாஸ் தரப்பில் வழங்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடினார். அதிலும் டான்ஸ் மாரத்தானில் சிறப்பாக நடித்து மக்கள் மனதை வென்றது மட்டும் இல்லாமல் போட்டியாளர்களின் மனதையும் வென்றார். அதேநேரத்தில் பிக்பாஸ் கொடுத்த காலேஜ் டாஸ்க்கில், கடினமான போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமாவை அட்டாக் செய்தார். இதற்கு பதில் அட்டாக் செய்ய நிக்சன் களமிறங்க, நிக்சனை மாயாவும் பூர்ணிமாவும் தலையில் வைத்து கொண்டாடினர். தன்னை அட்டாக் செய்த நிக்சனை சராமாரியாக அட்டாக் செய்தார் அர்ச்சனா. அர்ச்சனா நிக்சனைத் தாக்க இருவரை பயன்படுத்தினார். அதாவது நிக்சன் – ஐஷூ காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஐஷூ வெளியறியதற்கு நிக்சன் தான் முக்கியக் காரணம் என கூறினார் அர்ச்சனா. இது இவர்களுக்கு இடையில் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதைப் போல சண்டை கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கொஞ்சகாலத்திற்கு நிக்சனை தாக்கு தாக்கு என தாக்கி வந்த அர்ச்சனா கொஞ்சம் அவருக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் தாக்க ஆரம்பித்தார். அர்ச்சனா காத்துக்கொண்டு இருந்தைப் போல் மீண்டும் அர்ச்சனாவிடம் சிக்கினார். குறிப்பாக வினுஷா குறித்து நிக்சன் கூறிய மோசமான விமர்சனத்தை குறிப்பிட்டு அட்டாக் செய்து தனக்கு ஆதரவை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது மட்டும் இல்லாமல், நிக்சன் மீதான நெகடிவ் ஷேடை அதிகமாக்கியது. இருவருக்கும் இடையில் சண்டை முற்றும்போது நிக்சன் “ சொருவீடுவேன்” என உடல்மொழியுடன் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை வீக் எண்டில் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி பேசினார். இது மேலும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக முடிந்தது. 

சரவண விக்ரம், ஜோவிகா போன்ற போட்டியாளர்களை சிங்கிள் கேண்டில் டீல் செய்தார் அர்ச்சனா. சர்வண விக்ரம் போரிங் போட்டியாளர் என்பதை ரசிகர்களிடத்தில் நன்கு பதியவைக்க, அவரைப்போல் நடிக்க வேண்டும் எனக் கூறியபோது, ப்ரோ எப்படி ப்ரோ இப்படி இருக்கீங்க. உங்கள மாதிரி என்னால கொஞ்ச நேரம்கூட இருக்க முடியல. நீங்க எப்படிதான் எப்பவும் இப்படி இருக்கீங்களோ” எனக் கூறி சரவண விக்ரம் போரிங் போட்டியாளர் என ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதியவைத்தார்.  தன்னுடன் வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்த தினேஷ் மிகவும் சவாலான போட்டியாளர் என்பதை புரிந்துகொண்ட அர்ச்சனா. தினேஷை நேரடியாக கிடைக்கும் இடங்களில் அட்டாக் செய்தார். குறிப்பாக தினேஷுக்கும் விசித்ராவுக்கு அடிக்கடி சண்டைகள் வரும்போதெல்லாம் விசித்ராவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பி தினேஷ்க்கு டார்கெட் செய்தார். 

இந்த சீசனில் அர்ச்சனா கோப்பையை தட்டிக்கொண்டு செல்ல முக்கிய காரணம் இறுதி நாட்களில் அவரிடத்தில் வன்மம் இல்லை.  மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வன்மத்துடனே இருந்தனர். குறிப்பாக விஷ்ணு, தினேஷ் மற்றும் மணி வன்மத்தின் உச்சமாகவே காணப்பட்டனர். பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மாயாவும் அர்ச்சனாவுமே அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இடத்தில் இருந்தனர். இறுதி நாட்களில் அர்ச்சனா ஒருமுறை கூட யாரிடமும் வன்மத்துடன் காணப்படவில்லை. அவர் அதிகப்படியாக சொல்லிகொண்டு இருந்த விஷயமே நான் முடிந்தவரை இந்த வீட்டில் நல்ல நினைவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். அதற்காக  அர்ச்சனா கூடுமானவரை தன்னை அர்பணித்தார். அர்ச்சனா கோப்பையை வெல்வார் என போட்டியாளர்களே பலமுறை கூறியுள்ளனர். மாயாவுக்கும்  கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அவர் இறுதி நாட்களில் வீட்டிற்குள் வந்த எவிக்ட் ஆன போட்டியாளர்களின் பேச்சினைக் கேட்டு அர்ச்சனாவை அட்டாக் செய்தார். இது அவருக்கே பேக் ஃபையர் ஆகிவிட்டது.  

தைரியத்துடனான யுக்தி
இந்த சீசனில் தொடக்கம் முதல் இறுதி வரை போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் நிறைந்து காணப்பட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் வன்மம் இல்லாமல் விளையாடி கோப்பையை வென்றுள்ளார் அர்ச்சனா. சீசன் முழுவதும் வன்மம் இல்லாமல் விளையாடிய போட்டியாளர்களில் மணி சந்திராவுக்கும் இடம் உண்டு. ரசிகர்கள் அதனால்தான் வன்மம் இல்லாமல் விளையாடிய போட்டியாளர்களுக்கு  ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். இந்த சீசனில்தான் இதுவரைக்கும் இல்லாததைப் போல் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸில் கலந்துகொண்டு, ஒருமுறை கூட கேப்டனாகாத அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார் என்றால் அவர் உணர்த்துவது ஒன்றுதான். எல்லாமே ஒரு அளவுக்குதான் ப்ரோ.. அதற்கு அப்பறம் இறங்கி அடிக்கனும்.. யுக்திகள் மட்டும் போதாது, சரிவில் இருந்து மீண்டு வரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைரியத்துடனான யுக்திதான் வெற்றியை பெற்றுத்தரும் என்பதை உரக்கச் சொல்கின்றார். பிக்பாஸ் சீசன் 7 தமிழ் டைட்டிலை வென்ற அர்ச்சனாவுக்கு ஏபிபி சார்பாக வாழ்த்துகள்.  

Source link