Ram Temple Ayodhya : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி முதல் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தரபிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 23ஆம் தேதி, 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக அறக்கட்டளை ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
First Aarti of Ram Lalla 🙏🙏pic.twitter.com/qFOuIb33Qt
— Prayag (@theprayagtiwari) January 23, 2024
பக்தர்கள் தொடர்ச்சியாக வருகை தரும் நிலையில் குழந்தை ராமருக்கான ஆரத்தி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணிக்கு ஸ்ரீநகர் ஆரத்தியும், காலை 6.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும் என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என விஷ்வ இந்தி பரிஷத் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நண்பகலில் போக் ஆரத்தியும் மாலை 7.30 மணிக்கு மாலை நேர ஆரத்தியும் இரவு 8 மணிக்கு 2 வது போக் ஆரத்தியுடன் தரிசன பூஜைகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி கோயில் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “ராமர் கோயில் திறப்பாலும் அயோத்தியை மதச் சுற்றுலா தலமாக ஊக்குவிக்க உத்தரப் பிரதேச அரசு எடுத்த நடவடிக்கையாலும் நிதியாண்டில் 25,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5 கோடி பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் Google Pay மற்றும் BharatPe போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு பணத்தை நன்கொடையாக வழங்கலாம்.