Annadurai: நவீன தமிழ்நாட்டின் சிற்பி! மறைந்த பின்பும் தமிழ்நாட்டை ஆளும் அண்ணாதுரை!

"அண்ணாதுரை கொண்டு வந்தவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என எண்ணும்போதே, மக்கள் வெகுண்டெழுவார்களோ! என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா? அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்" என 57 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா கூறியவை இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது.

"அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான்"

தனது தெளிவான கொள்கைகளாலும், தனது அரசியலாலும் கோடிக்கணக்கான இதயங்களை தன் வசப்படுத்தியவர் அண்ணாதுரை. மாநிலங்களவையில் அவர் முதல் முறையாக பேசும்போது, அவரின் உரை, வீசும் வாள்போல் கூர்மையாக இருந்தது. உலக வரலாற்றை எழுதிய நேரு உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் ஆற்றிய உரை நாடாளுமன்றத்தை அதிர வைத்தது.

"நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன்.

சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை. இந்த அவையின் உறுப்பினர்கள் காட்டிய அன்பை பல நேரங்களில் பார்த்தேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. சில இந்தி மொழி பேசும் உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை அந்த அன்பு மறக்கடிக்க வைக்கிறது. உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு" என அண்ணா பேச, நேரு உள்பட மொத்த அவையும் ரசித்துக் கேட்டது. பல உறுப்பினர்கள் இடையில் குறுக்கிட்டனர்.

நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பி:

இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணாவின் முதல் உரையில் குறுக்கீடுகள் இருந்தது போல, வேறு யாருக்கும் இருந்ததில்லை. ஏனென்றால், முதல் உரையில் யாரும் குறுக்கீடக் கூடாது என்பது அவை மரபு. ஆனால், குறுக்கீடுகளை வரவேற்று பேசிய அண்ணா, ”குறுக்கீடுகளை கண்டு நான் கூச்சப்படுபவன் அல்ல. குறுக்கீடுகளை விரும்புகிறவன்” என்றார் அண்ணா.

அண்ணா ஒரு தேர்ந்த ஜனநாயகவாதி என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று இருக்க முடியாது. பெரியார் பாதையில், இறை மறுப்பாளராக இருந்தபோதிலும், தான் கட்சி ஆரம்பித்த போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார். ஒரு படி மேலே சென்று, பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் என்று கூறி அனைத்து மக்களையும் தனது பக்கம் ஈர்த்துக்கொண்டவர் அண்ணா.

தமிழ்நாடு தற்போது இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட அண்ணா தான் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழ்நாடு என பெயர் சூட்டியது முதல் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தது, இருமொழிக் கொள்கை வகுத்தது வரை அண்ணா விதைத்த விதைதான் நவீன தமிழ்நாட்டுக்கு அடித்தமாக அமைந்தது.

மதச்சார்பற்ற கொள்கைக்கு மிக பெரிய சவால் வந்திருக்கும் சூழலில், இன்னும் ஒரு மாநிலம் மட்டும் மதச்சார்பின்மையை தாங்கி பிடிக்கிறது என்றால், மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசு என்று கூறும் நிலையில் தமிழ்நாடு மட்டும் அண்ணாவைப்போலவே இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு. இந்தியா ஒன்றியங்களின் அரசு என்று குறிப்பிடுகிறது என்றால், அண்ணா இறந்து 53 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அண்ணா தான் ஆண்டு கொண்டிருக்கிறார் என்று தானே பொருள்.

Source link