AMMK General Secretary TTV Dhinakaran Flays Tamil Nadu budget 2024 says DMK is daydreaming


தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்:
வடசென்னை வளர்ச்சிக்கு என 1000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய குடியிருப்புகள் கட்டித் தருவது, பள்ளிகளை திறன் மிகுந்தவையாக மேம்படுத்துவது, தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பது, ஏரிகள் சீரமைப்பு மற்றும் மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளிக்கும் தேர்தல் கால திமுக அரசின் விளம்பர பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
‘மாபெரும் தமிழ்க்கனவு ‘ எனும் தலைப்பில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கையில் சமூகநீதியை முதல் இலக்காக நிர்ணயித்திருக்கும் திமுக அரசு, அந்த சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறது. மாநிலங்களே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பீகார் தொடங்கி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஜார்காண்ட் என பல மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்க தமிழகம் மட்டும் மத்திய அரசையே இன்னமும் எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்?
டி.டி.வி. தினகரன்:
ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்கள், மாணவ, மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் விலையில்லா மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட இதய தெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட நாடுபோற்றும் நல்ல திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது கடும் கண்டனத்திற்குரியது.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 500 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பொதுமக்கள், விளைநிலங்கள் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தும் மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்புக்காக தவித்து கொண்டிருக்கும் தமிழக இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக தந்திருக்கிறது திமுக அரசு” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டை பாராட்டி பேசியுள்ள மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, “மாபெரும் தமிழ் கனவுடன் தமிழக அரசின் 2024-25 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார். 
வைகோ:
சமூக நீதி, கடைக் கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் தொழிலுக்கு ஆதாரமான காவிரி வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 2.2 விழுக்காடு மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க திட்டமிடப்பட்டு இருக்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டை விமர்சித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன், “தமிழக அரசின், 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல் மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாக, தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்:
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பேசியுள்ள பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ” ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன், ஓராண்டிற்கான வட்டி மட்டும் ரூ.63,722 கோடி எனில், எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காண

Source link