ACTP news

Asian Correspondents Team Publisher

விஜய்யின் கோட் படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு நடிகர் பிரசாந்த் கூறிய பதில்…

விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கோட் திரைப்படத்தின் புதிய தகவல் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு? நடிகர் பிரசாந்த் மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.

உலக ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) தினத்தையொட்டி, சென்னை தீவுத்திடலில் சுமார் 500 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனித உடலில் கல்லீரல் என்பது மிகவும் முக்கியமானது என்றார். அதனை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் அமைந்த‍தாக தெரிவித்தார்.

தன்னுடைய நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள அந்தகன் திரைப்படத்திற்கும், மனித உடலில் உள்ள கல்லீரல் பகுதிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவித்த பிரசாந்த், அந்த படத்தின் ஆரம்பத்தில் என்ன வாழ்க்கை கல்லீரலை தவிர வேறில்லை என ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்றார்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அந்தகன் திரைப்படம் வெளிவர உள்ளது என்றும் அவர் கூறினார்.

அப்போது, விஜய் நடிப்பில் வெளிவரக்கூடிய கோட் திரைப்படம் குறித்த புதிய தகவல் ஏதேனும் இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, காலையில் இவ்வளவு சீக்கிரமாக சென்னை மக்கள் வந்திருக்கின்றார்கள் என்றும், அதை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மழுப்பலாக பிரசாந்த் பதிலளித்தார்.

மேலும், அந்தகன் திரைப்படத்தை நடிகர் விஜய் பார்ப்பாரா? என்று எழுப்ப‍ப்பட்ட கேள்விக்கு, நன்றி வணக்கம் என கூறினார்.