வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும், தொகுதி பங்கீட்டில் பிரச்னை, கூட்டணியில் இருந்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விலகியது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவை தந்து வருகிறது.
இருந்த போதிலும், கூட்டணியை ஒற்றுமையுடன் நடத்தி சென்று பாஜகவை வீழ்த்துவதில் தலைவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் ஒன்றிணைந்தது. முதலில், சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 18ஆம் தேதி நடைபெறவிருந்தது.
கவனத்தை ஈர்த்த சண்டிகர் மேயர் தேர்தல்:
ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி, பிப்ரவரி 6ஆம் தேதிக்கு மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஜனவரி 30 (இன்று) நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
மொத்தம் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் தேர்தலில் நின்ற குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தது. பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில், பாஜக அநியாயமாக செயல்பட்டதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து டெல்லி முதலமைச்சரும் ஆத் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்பட்ட விதம் மிகவும் கவலை அளிக்கிறது.
INDIA கூட்டணிக்கு அல்வா கொடுத்த தேர்தல் அதிகாரி:
நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்கள். ஒரு மேயர் தேர்தலுக்காக இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கினால், நாட்டின் தேர்தலுக்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இது மிகவும் கவலை அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டா கூறுகையில், “இது தேசத் துரோகச் செயலாகும். எங்களின் எட்டு ஓட்டுகளும் (செல்லாதவை) அறிவிக்கப்பட்டன. பாஜகவின் ஒரு ஓட்டு கூட செல்லாததாக அறிவிக்கப்படவில்லை. ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டால், அனைத்து கட்சிகளின் முகவர்களிடமும் (வாக்கு சீட்டை) தேர்தல் அதிகாரி காட்ட வேண்டும். ஆனால், இன்று அது நடக்கவில்லை” என்றார்.
When the Presiding Officer announced the result, the BJP Mayor Candidate sat on the Mayor Chair, and the Presiding Officer left with the rejected votes without showing them to the Councillor agent. #ChandigarhMayorElection pic.twitter.com/ACo9gRxjk4
— Gagandeep Singh (@Gagan4344) January 30, 2024
முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலில் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார், துக்கத்தில் அனைவரின் முன்பும் அழுதார். ஆம் ஆத்மி கட்சியினர், அவரை சமாதானப்படுத்த முயன்றனர். பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.