மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய கூறியும், பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து, சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில், தலைமறைவாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.

போராட்டத்தின்போது குச்சிகள் மற்றும் துடைப்பங்களுடன், குடியிருப்பாளர்கள் சந்தேஷ்காலியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. போராட்டத்தின்போது, ஷாஜகானின் உதவியாளர் ஷிபோபிரசாத் ஹஸ்ராவின் வீடு மற்றும் கோழிப்பண்ணை சேதப்படுத்தப்பட்டது. மேலும் சில கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.