தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமாவில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் இதுவாகும்.
நெருங்கி வரும் ‘சைரன்’ :
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதை தவிர ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மறக்கமுடியாத சம்பவம் :
ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் ‘சைரன்’ படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் குறித்து பகிர்ந்து இருந்தார்.
“ஒரு முறை இரவில் என்னுடைய தோழியுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருக்கும் போது குடி போதையில் இருந்த ஆள் ஒருவன் என் மேல வந்து விழுந்தான். கோபத்தில் அந்த ஆளை ஓங்கி அறைந்துவிட்டேன். பின்னர் நானும் என்னுடைய தோழியும் கொஞ்ச தூரம் நடந்து சென்று விட்டோம். அப்போது என் தலையில் பலமாக ஏதோ அடிபட்டதுபோல இருந்தது. கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் போனது. திரும்பி பார்த்தால் அந்த குடிகாரன்தான் என்னை தாக்கி விட்டு ஓடுவதை பார்த்தேன். உடனே நானும் என்னுடைய தோழியும் அவனை விரட்டி பிடித்து அருகில் இருந்த போலீஸ் பூத்தில் நடந்ததை சொல்லி ஒப்படைத்தோம்” என்றார் கீர்த்தி சுரேஷ்.
இந்த கதையை கேட்ட பிறகு கீர்த்தி சுரேஷ் துணிச்சலையும், தைரியத்தையும் அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் அவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அதிர்ச்சி சம்பவமாக இருந்தாலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் மற்ற பெண்களுக்கும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
மேலும் காண