தமிழகத்தில் அனுமதியில்லாமல் எங்கும் பார்கள் இயங்கவில்லை என்ற அமைச்சர் முத்துசாமி, அவ்வாறு நடப்பதாக தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மணல்மேட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இளைஞரணி சார்பில் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, நீதிமன்றம் வழங்கிய வழிமுறைகளின்படி பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றார்.
அனுமதியில்லாமல் எங்கும் பார் இயங்கவில்லை என்று கூறிய அமைச்சர் முத்துசாமி, அவ்வாறு நடப்பதாக தெரிவிக்கும் பட்சத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். டெட்ரா பாக்கெட் குறித்து சில கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளதாகவும், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்தை கேட்டப்பிறகு இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது 99 விழுக்காடு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் பில் கொடுப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும், அனைத்து கடைகளுக்கும் மெஷின் வழங்கப்பட்டு பில் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.