காஞ்சிபுரம் அரசு ஒன்றிய அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை
காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் துவங்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர் சேர்க்கை முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கை
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5 வயது நிறைவடைந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை தவிர்க்க அனைத்து குழந்தைகளின் விவரங்கள் அடிப்படையில் அவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை ஆசிரியர்கள் விநியோகிக்க வேண்டும். அதேபோன்று அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் குழுக்களை அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாகவும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். கோடை விடுமுறைக்கு முன்பாகவே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கையும் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 125, மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி ஆண்டின் இறுதியில் வடை பாயாசம் மற்றும் இனிப்புடன் தலைவாழை இலை விருந்து வைப்பது வாடிக்கை. இந்த ஆண்டும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், காலை உணவுத்திட்டம் மற்றும் சத்துணவுத்திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புடன் விருந்து வைக்கப்பட்டது.
இவ்விருந்தில் பள்ளி தலைமையாசிரியர் தணிகை அரசு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை அறிவியல் ஆசிரியர் சேகர் கணித ஆசிரியை லதா இடைநிலை ஆசிரியர்கள் சீனிவாசன் கலைவாணன் பொற்கொடி ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்தில் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்ட பொழுது, ஸ்ரீஹரி கோட்டாவிற்கு பள்ளிசையை சேர்ந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அழைத்து சென்றிருந்தார். தொடர்ந்து இதுபோன்று மாணவர்களை கவரும் வகையில், பல்வேறு புதிய மாற்றங்களை பள்ளி ஆசிரியர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இயற்கையாகவே படிப்படியாக பள்ளியில் பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண