Lok Sabha Election 2024 Congress Candidate Jothimani Campaigned In An Open Van In Karur – TNN

கரூரில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த ஜோதிமணி ரூ.44 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்தார்.
 
 

 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வழிபாடு நடத்தி விட்டு, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா எம்.பி வரும் வரை, காத்திருந்து அதன் பிறகு தாம்பூல தட்டையும், பிரசாதமும் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தனர். 
 
 

 
அப்போது திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜோதிமணி, கோடங்கிபட்டி பகுதி வழியாக செல்லும் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தனது தொகுதி மேம்பாட்டின் மூலம் 44 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கோடங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து, ஒன்றரை வருடத்தில் பாலப்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 
 
 

 
 
தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3000 உயிர் பலி ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் பாலம் அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் கடுமையாக போராடியதாக தெரிவித்தார். தொடர்ந்து பாலம் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை பெண்களுக்கு வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
 
 
 
 
 

Source link