முடிவுக்கு வருகிறதா சரத் பவார் அரசியல் அத்தியாயம்? முற்றுப்புள்ளி வைத்த மகாராஷ்டிரா சபாநாயகர்!

கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர்.

சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அண்ணன் மகன்:

மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தொடர் பிரச்னை நிலவி வந்த நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது. அஜித் பவாரின் கட்சியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

அதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடிகார சின்னமும் அஜித் பவாருக்கு ஒதுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களும் எம்பிக்களும் அஜித் பவாருக்கு ஆதரவாக இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

முடிவுக்கு வருகிறதா சரத் பவார் அரசியல் அத்தியாயம்?

இந்த நிலையில், மேலும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார் சரத் பவார். அஜித் பவாருக்கு ஆதரவாக இருக்கும் 41 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் இன்று அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்றியே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று நான் நம்புகிறேன். அவர்களே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அஜித் பவாருக்கு 41 எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இது மறுக்க முடியாதது. தகுதி நீக்கம் கோரிய அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுகின்றன" என்றார்.

அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அவகாசம் அளித்தது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில், அஜித் பவாருக்கு ஆதரவாக 41 எம்எல்ஏக்களும் சரத் பவாருக்கு ஆதரவாக 12 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

யார் இந்த சரத் பவார்?

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் முக்கியமானவர். இவர்1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலில்  உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டவர்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரிவுகளின்போது சரத் பவார் என்கிற பெயரும் அடிபட்டுக்கொண்டே  இருந்தது. இவர் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

இத்தாலியில் பிறந்த காரணத்தால் சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் சரத் பவாரும் ஒருவர். இதனால் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற தலைவர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு மே மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.

Source link