மிஸ் திருநங்கை அழகி போட்டி… முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த ஷாம்சி

விழுப்புரத்தில் திருங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய திருநங்கைகள். இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த ஷாம்சி தேர்வு.

மகாபாரத போர்

மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதியும், அதனைத்தொடர்ந்து வரும் 24ஆம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி துறந்து கைம்பெண் கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இப்படி விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை திருநங்கை நாயக்குகள் சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் திருநங்கை – 2024 என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி இன்று (21ஆம் தேதி) இரவு நடைபெற்றது.

மிஸ் திருநங்கை அழகிப் போட்டி

இவ்விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

இதன்பின்னர் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து இசைக்கு ஏற்றபடி நளினத்துடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னை திருநங்கை

பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் முதலிடம் பிடித்து இந்த ஆண்டிற்கான மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த ஷாம்சி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடம் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு படித்து வரும் திருநங்கை வர்ஷா மற்றும் 3ம் இடம் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபப்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த், தீபக், நடிகைகள் அம்பிகா, தீபா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Source link