மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதி… அயோத்தி வழியில் ஞானவாபி.. நடந்தது என்ன?


அயோத்தியை போல தொடர் சர்ச்சையை கிளப்பி வருவது ஞானவாபி மசூதி வழக்கு. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். 
அயோத்தி பாதையில் செல்லும் ஞானவாபி:
ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது.
கடந்த வாரம், ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது.
நீதிமன்றம் கூறியது என்ன?
முன்பு இருந்த இந்து கோயிலின் ஒரு பகுதி தற்போது மசூதியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்து கோயிலின் தூண்களில் சிறிய மாற்றங்கள் செய்து அதன்மீது கட்டுமானங்கள் எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட அடித்தள பகுதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதியில் தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை, ஏழு நாட்களில் முடிக்க வேண்டும் என்றும் பூஜைகளை விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், “இந்து தரப்பு பூஜைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஏழு நாட்களுக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏழு நாட்களுக்குள் பூஜை துவங்கும். அங்கு பிரார்த்தனை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு” என்றார்.
மசூதியின் அடித்தளத்தில் 4 பாதாள அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில்தான் அர்ச்சகரின் வம்சாவளியினர் வசித்து வந்தனர். தற்போது கூட, அந்த அறை, அர்ச்சகர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அர்ச்சகர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
முன்பு இருந்த இந்து கோயிலின் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் தேவநாகரி, கிரந்த, தெலுங்கு மற்றும் கன்னடம் என 32 வகையான எழுத்துகள் இருந்துள்ளன.  இந்த எழுத்துகளின் வாயிலாக மூன்று இந்து தெய்வங்களின் பெயர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனார்த்தன, ருத்ரா மற்றும் உமேஷ்வரா போன்ற மூன்று தெய்வங்களின் பெயர்கள் காணப்படுகின்றன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link