விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் பானை சின்னம் அழிப்பு

விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர், தற்போது சுயேட்சை சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். புதிய சின்னம் என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல இடங்களில் பானை சின்னத்தை சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனம் அருகே சார் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியிலுள்ள (சிங்கனுார் சாலை) சுவர்களில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பானை சின்னம் வரையப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சி

இந்த சின்னத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மை ஊற்றி அழித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி பதிவில், பைக்கில் வரும் நபர், பானை சின்னத்தை அழிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

போலீசார் விசாரணை

இதனால் அப்பகுதியில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மயிலம் காவல் போலீசார் பானை சின்னத்தை அழித்த நபர் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மரக்காணம் அருகே ஆலங்குப்பம் பகுதியில் பானை சின்னம் அழிக்கப்பட்டது. தற்போது திண்டிவனம் அருகே பானை சின்னம் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.