எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சஸ்பென்ஸ்க்கு முடிவு கட்டிய கமல்நாத்:

சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் பலர், இந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். கடந்த 12ஆம் தேதி, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் அஹிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விதிஷா ராகேஷ் கட்டாரே பாஜகவில் இணைந்தனர். இதற்கிடையே, டெல்லிக்கு நேற்று சென்ற கமல்நாத், பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

கடந்த நவம்பர் மாதம், கமல்நாத் தலைமையில் மத்திய பிரதேச தேர்தலை சந்தித்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் தூக்கப்பட்டார். இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் அவர் சீட் கேட்டதாகவும் ஆனால் கட்சி தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

பாஜகவுக்கு செல்கிறாரா? இல்லையா?

இச்சூழலில், சமூக வலைதளங்களில் சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸை நீக்கினார் கமல்நாத்தின் மகன் நகுல்நாத். எனவே, தனது மகனுடன் கமல்நாத் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில், கமல்நாத் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகளுக்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணையமாட்டேன் என கமல்நாத் கூறியிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைலர் ஜீது பட்வாரி கூறுகையில், "இது கமல்நாத்துக்கு எதிராக செய்யப்பட்ட சதி. நான் அவரிடம் பேசினேன். இவை அனைத்தும் வெறும் வதந்திகள் என்றும், அவர் காங்கிரஸ்காரர் என்றும், காங்கிரஸ்காரராகவே இருப்பார் என்றும் கடைசி மூச்சு வரை காங்கிரஸ் சித்தாந்தத்துடன் இருப்பேன் என்றும் கூறினார். இது அவரது சொந்த எண்ணம். இதை கமல்நாத்தே சொன்னார்" என்றார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜகவே ஆட்சி நடத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், 15 மாதங்களில் அது கவிழ்ந்துவிட்டது.