எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது.

தெலங்கானா முதலமைச்சருக்கு சம்மன்:

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள நிலையில், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தெலங்கானா முதலமைச்சரை தவிர மேலும் நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது தெலங்கானா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, பல அரசியல் கட்சித் தலைவர்கள் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோவில் இருந்தது என்ன?

எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித் ஷா பேசுவது போல் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பாஜக மற்றும் உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153, 153 ஏ, 465, 469, 171 ஜி மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 66 சி ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

வீடியோவைப் பதிவேற்றிய மற்றும் பகிர்ந்த கணக்குகள் குறித்த தகவல்களைக் கோரி எக்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா, "காங்கிரஸ் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறது. இது முற்றிலும் போலியானது. பெரிய அளவிலான வன்முறையை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது" என்றார்.

இதற்கு பதிலடி அளித்த தெலங்கானா முதலமைச்சர், "சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது, அவர்கள் டெல்லி காவல்துறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், யாருக்கும் பயப்பட மாட்டோம்" என்றார்.