அரசு ஊழியரை நடுவழியில் இறக்கிவிட்ட கர்நாடகா அரசு பேருந்து! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 42). இவர் கர்நாடகா மாநிலம் மைசூரில் மத்திய அரசு பணியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி விழுப்புரத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழக பேருந்தில் ரூ.660 கொடுத்து முன்பதிவு செய்து பயணம் செய்தார்.

பணத்தை தர மறுத்த நடத்துனர்:

அப்போது அவர் ஒரு கேனில் 15 லிட்டர் ஆர்கானிக் எண்ணெய் (கடலை எண்ணெய்) வைத்திருந்தார். அதைப்பார்த்த பேருந்து நடத்துனரான ஜெகதீஷ், பேருந்தில் அதை கொண்டு செல்லக்கூடாது என்றார். பின்னர் இருக்கையின் அடியில் வைத்துக்கொள்ளுமாறு கூறிய நடத்துனர், அதற்கு லக்கேஜ் கட்டணமாக ரூ.200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தெய்வசிகாமணி ரூ.50 வேண்டுமானால் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதை நடத்துனர் ஜெகதீஷ் ஏற்க மறுத்ததால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தெய்வசிகாமணியை கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையம் அருகில் பேருந்துசில் இருந்து கீழே இறக்கி விட்டனர். அப்போது அவர், ஜெகதீசிடம் தனது பயணச்சீட்டுக்கான பணத்தை திருப்பித்தருமாறும், தான் பெங்களூரு செல்ல கையில் வேறு எதுவும் பணம் இல்லை என்று கூறினார். அதற்கு ஜெகதீஷ் தர மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட தெய்வசிகாமணி, இதுபற்றி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 22.9.2023 அன்று வழக்கு தொடர்ந்தார்.

1 லட்சம் அபராதம்:

இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறியுள்ளனர். அதாவது இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட தெய்வசிகாமணியை இரவுநேரம் என்று பாராமல் நடுவழியில் இறக்கி விட்டு பயணச்சீட்டுக்கான பணத்தை திருப்பி அளிக்காமல் சென்றதற்காகவும், அவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் சம்பந்தப்பட்ட கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் மற்றும் பேருந்து கண்டக்டர் ஜெகதீஷ் ஆகியோருக்கு ரூ.1 லட்சம் அபராதமும், புகார்தாரருக்கு பயணச்சீட்டுக்கான தொகையான ரூ.660-ஐ 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், மற்றும் அவருடைய வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link