ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!


ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதமும் தமிழ்நாட்டிற்கு மிகவும் மோசமாக அமைந்து வருகிறது. நடப்பாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தது. சென்னையில் பல இடங்களிலும் ஒரு வாரத்திற்கு மேல் 10 நாட்களாக தண்ணீர் வற்றாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
வெள்ள நிவாரணம்:
மிக்ஜாம் புயல் சென்னையை வாட்டி வதைத்த துன்பம் தீர்வதற்கு முன்பே, தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் வரலாறு காணாத பேய் மழை பெய்தது. இதனால், அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள், பாலங்கள் மிக கடுமையாக சேதம் அடைந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்த தண்ணீரால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக கடுமையாக பாதித்த இந்த புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 38 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டது. இதுவரை வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசு இன்று வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது.
கேட்டது ஒன்று; கொடுத்தது ஒன்று
அதன்படி, தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு மட்டும் ரூபாய் 285 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் இருந்து ரூபாய் 115 கோடியை மட்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூபாய் 397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் இருந்து ரூபாய் 160 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 
கரநாடகாவிற்கு வறட்சி நிவாரணம்:
ஆனால், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசு ரூபாய் 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே கடந்த 19ம்  தேதி வாக்குப்பதிவு நிறைவுபெற்றுவிட்டது. கர்நாடகாவில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், கர்நாடகாவில் எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கு விரைவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் எஞ்சிய 14 தொகுதிகளில் உள்ள மக்களின் வாக்குகளை கவரவே, மத்திய அரசு கர்நாடகாவிற்கு மட்டும் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதாகவும் தமிழக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்.தீராத… pic.twitter.com/4IpZXjvMD9
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 27, 2024


மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்.
என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் காண

Source link