சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசியது, "மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் (மகளிர் திட்டம்) மூலம் கணக்கெடுப்பு பணி கடந்த 04.12.2023 முதல் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு எளிதில் கிடைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சமூகத்தரவு தளத்தை உருவாக்கவும் இக்கணக்கெடுப்பு வழிவகை செய்கிறது. சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாகனம் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) என்ற மொபைல் செயலி மூலம் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தங்களது இல்லம் தேடி வரும் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி அவர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இக்கணக்கெடுப்பின்போது, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை (UDID Card), ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கணக்கெடுப்பாளர்களிடம் காண்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கணக்கெடுப்பு பணியானது மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட மேம்பாட்டிற்கும், எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மறுவாழ்வு பணிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் இக்கணக்கெடுப்பின்போது, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றார்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் 0427-2415242 மற்றும் 94999 33489 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.