<p style="text-align: justify;">மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு ஓடி விட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். இந்த நிலையில் தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பிற்காக மாத உதவித்தொகையை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியான நிலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. </p>
<p style="text-align: justify;">இந்நிலையில் கடந்த ஆண்டு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நலம் தேறி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இதனையடுத்து அவரது உடலானது திருப்புவனத்தில் உள்ள கதிரேசனின் மகள் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக்கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் DNA மாதிரி எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷ் தனது மகன் என நீதி கேட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வந்த கதிரேசன். – மீனாட்சி தம்பதியினரில் கதிரேசன் காலமானது அவரது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. </p>