அரசியலமைப்பை பொறுத்தவரையில், துணை முதலமைச்சர் என்ற பதவி இல்லாவிட்டாலும் பல்வேறு மாநிலங்களில் துணை முதலமைச்சர்களை நியமிப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு சில மாநிலங்களில் எல்லாம் இரண்டுக்கும் மேற்பட்ட துணை முதலமைச்சர்கள் இருக்கின்றனர்.

துணை முதலமைச்சர் பதவி அரசியலமைப்புக்கு உட்பட்டதா?

குறிப்பாக, ஆந்திர பிரதேசத்தில் ஐந்து துணை முதலமைச்சர்கள் இருக்கின்றனர். ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு முதலமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். அரசியலமைப்பில் இல்லாத ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அது வழக்கமாகி வரும் நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத ரீதியாக துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவதாக கூறி, துணை முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சியால் வழக்கு தொடர்ந்தது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 14 (Right to equality), பிரிவு 15 (மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்பதை நிறுவும் சட்டப்பிரிவு).

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. துணை முதலமைச்சர்கள் நியமிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் மாநிலத்தின் அமைச்சர்களாகவும் இருப்பதால் அவர்களை துணை முதலமைச்சராக நியமிப்பதில் எந்த தவறும் இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. வழக்கை தள்ளுபடி செய்த இந்திய தலைமை நீதிபதி, "மாநில அரசின் முதன்மை அமைச்சர்களாக துணை முதலமைச்சர்கள் உள்ளனர்.

துணை முதலமைச்சராக பதவி வகிப்பவர்கள், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும். இம்மாதிரியான நியமனங்கள் அரசியலமைப்பை மீறவில்லை. துணை முதலமைச்சராக பதவி வகிப்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதில்லை. அரசின் மற்ற அமைச்சர்களை போன்றுதான் அவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது" என்றார்.

பொதுவாக, கூட்டணி அரசு அமைக்கும்போது, துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா – பாஜக – தேசியவாக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசாங்கம் நடந்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

கூட்டணி அரசு இல்லாத ஒரே கட்சி ஆட்சி அமைக்கும்போதும் துணை முதலமைச்சரை நியமிப்பது வழக்கமாகி வருகிறது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தாலும், அங்கு ஐந்து முதலமைச்சர்கள் இருக்கின்றனர்.