காஞ்சிபுரம் காரப்பேட்டையில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேகமாக செயல்படும் மருத்துவமனையாகும். இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட 1969ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து வரும் புற்றுநோயாளர்களின் சிகிச்சை தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
புற்றுநோய் மருத்துவமனை:
அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் PET CT Scan எனப்படும் புதிய கதிரியக்க பரிசோதனை உபகரணம், ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் எச்.டி.ஆர் (HDR Brachytherapy) அண்மைக் கதிர்வீச்சு சிகிச்சை கருவி, ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் க்ரையோஸ்டாட் ஆய்வக பரிசோதனை கருவி, ரூ.18.80 இலட்சம் மதிப்பீட்டில் LMO (Liquid Medical Oxygen) திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து, ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் இறகு, பூப்பந்து விளையாட்டு மைதானத்தில் அமைச்சர்கள் இறகு பந்து விளையாடி துவக்கி வைத்தனர் .
மேலும், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கு, ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புட்குழியில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தையும், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி, எழிச்சூரில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தையும், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கரசாங்கால் மற்றும் தெற்கு மலையம்பாக்கத்தில் துணை சுகாதார நிலையம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி, சிறுதாமூரில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 7 மாணவர்களுக்கு கண் கண்ணாடியும், 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினையும் வழங்கினார்.
புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு:
பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசும்போது தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, “காஞ்சிபுரத்தில் பல்வேறு அடையாளங்கள் இருந்தாலும், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மையம் என்பது மிகப்பெரிய, சிகிச்சை மையமாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனை படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று பிரம்மாண்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி புதிய கட்டிடம் கட்டுவதற்காக இரண்டு கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு 220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடைய உள்ளது.
மருத்துவமனையில் தற்பொழுது 280 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்து கொண்டிருக்கிறார்கள். 780 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உருவெடுக்க உள்ளது. இந்தியாவில் பெரிய புற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிலையமாக மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் அதைவிட அதிக வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இது விளங்கும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவே உற்று நோக்கும் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையமாக காஞ்சிபுரம் காரபட்டியில் உள்ள மருத்துவமனை விளங்கும்.
காப்பாற்ற முடியுமா?
முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் பணியை துவங்கி இருக்கிறோம். 5 மாவட்டங்களில் அதிகமாக உள்ள சாயப்பட்டறை நிறைந்துள்ள மாவட்டமாக பட்டியல் ஈடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதை நேரடியாக நான் கண்காணித்து வருகிறேன். உதாரணமாக ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் அதில், இரண்டு அல்லது மூன்று பேருக்கு புற்றுநோய்க்கான தொடக்க நிலை பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். புற்றுநோயைப் பொறுத்தவரை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியப்பட்டால் 100% காப்பாற்றி விட முடியும். மூன்றாவது நிலை மற்றும் நான்காவது நிலை பாதிப்புகள் ஏற்படும் போது தான், அவர்களை காப்பாற்றுவது கடினம். தொடக்க நிலையில் அவர்களை கண்டறிந்து காப்பாற்றும் முயற்சி பெரிய அளவில் பலன் கொடுக்கிறது.
டெங்கு நோய் குறித்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2012 ஆம் ஆண்டு அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டும் குறைந்த அளவு அம்மாக்கள் பாதிப்படைந்தனர். 10 வாரங்கள் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தியா மருத்துவ வரலாற்றிலேயே வாரம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே தான்.
மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இன்குபேட்டர் உள்ளிட்ட பெட்டிகள் குறைவாக இருப்பதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுடன் கேட்டு, உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்தார். ஸ்கேன் எடுப்பதற்கு தேவையான, பணியாளர்களையும் தேவைக்கேற்ப நியமிக்கப்படும் என உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1021 மருத்துவர்கள் ,1266 சுகாதார ஆய்வாளர்கள், 983 மருந்தாளுனர்கள்,2242 கிராம சுகாதார செவிலியர்கள் பணிகள் நிரப்புவதற்கான நேர்காணல் ஆகியவை நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் பணி அமைற்றுவதற்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.. இதனைத் தொடர்ந்து மற்ற பணியாளர்களும் நிரப்பப்படுவார்கள் என தெரிவித்தார். மருத்துவத்துறை வரலாற்றிலே முதல் முறையாக முதல் முறை, பணியிடங்கள் நிரப்பும்போது கவுன்சிலிங் முறையில் நிரப்பி வருகிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்), மரு.கோபிநாத், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்