venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show


விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் கோலாகமாக நேற்று தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் (Venkatesh Bhat) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தன் நிகழ்ச்சி பற்றி அப்டேட் தந்துள்ளார்.
இனி சன் டிவியின் வெங்கடேஷ் பட்
விஜய் தொலைக்காட்சியில் காமெடி மற்றும் சமையல் கலந்து கடந்த 4 சீசன்களாக வித்தியாசமான மற்றும் தனித்துவமான கான்சப்ட் உடன் வலம் வந்து, ரசிகர்களின் இதயங்களை வென்ற நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி (Cooku with Comali). செஃப்கள் வெங்கடேஷ் பட், தாமு, தொகுப்பாளர் ரக்‌ஷன், முதல் சீசன் தொடங்கி பயணித்து வரும் கோமாளிகள் புகழ், சுனிதா, ஷிவாங்கி, மணிமேகலை என கலகலப்பாக சென்று கொண்டிருந்தது, இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக செஃப் வெங்கடேஷ் பட் விலகியது நிகழ்ச்சியின் ரசிகர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.
அக்கார்டு ஹோட்டலின் சிஇஓவான வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் உடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து விலகியதாகத் தகவல்கள் பரவிய நிலையில், செஃப் தாமுவும் முதலில் விலகுவதாக அறிவித்து பின் நிகழ்ச்சியில் தொடர்வதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று கோலாகலமாகத் தொடங்கிய ஐந்தாவது சீசனில், பிரபல சமையல்கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமுவுடன் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
‘உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்..’
ஐந்தாவது சீசன் தொடக்க நிகழ்ச்சி ஒருபுறம் களைகட்டினாலும், குக்கு வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்வதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், செஃப் வெங்கடேஷ் பட் தன்னை மிஸ் செய்யும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் தரும் வகையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் எல்லாம் எனக்கு அனுப்பின மெசேஜ்கள், நீங்கள் என்னை மிஸ் செய்வது இதைப் பற்றி எல்லாம் படிக்கும்போது நான் ரொம்ப கொடுத்து வைச்சவன், கடவுள் என்னை ரொம்ப ஆசிர்வதிச்சு இருக்காருனு எனக்கு தோணுது . என்னைக்கும் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். என்னைக்கும் உங்களை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.  நீங்கள் தான் என் இதயத் துடிப்பு. உங்களுக்காக இன்று முதல் காலை 8 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு. 8 மணில இருந்து சன் டிவி பாருங்க. ரொம்ப நன்றி” எனப்  பேசி வீடியோவினைப் பகிர்ந்துள்ளார்.
 

இரவு 8 மணிக்கு புதிய சமையல் ஷோ?
இந்நிலையில் இன்று இரவு 8 மணி முதல் சன் டிவியில் புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்கப்படுவது குறித்த ப்ரோமோக்கள், இன்று காலை முதல் சன் தொலைக்காட்சியில் வெளியாகி வருகின்றன. வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியின் மூலம் கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மேலும் இந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளியை பிரதி எடுத்தது போல் இருக்குமா, இல்லை ஏதாவது வித்தியாசமான கான்சப்ட் உடன் களமிறங்குவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். மேலும் நேற்றைய விஜய் தொலைக்காட்சியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் வெங்கடேஷ் பட் விலகல் குறித்து நிகழ்ச்சி ஹோஸ்ட்டுகள், செஃப் தாமு என எவரும் ஒரு வார்த்தை கூட பேசாததும் வெங்கடேஷ் பட் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அவரது சன் தொலைக்காட்சியின் புதிய ஷோவை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

மேலும் காண

Source link