உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து மேகவெடிப்பால் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்றும் திடீரென மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐஐடி கூர்க்கியை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒவ்வொரு இடங்களாக சென்று ஆய்வு செய்துள்ளனர். அதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
உத்தர்காசி, சாமோலி உட்பட 4 மாவட்டங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் டெக்டானிக் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், அங்கு 7 அல்லது 8 ரிக்டர் அளவு நிலநக்கம் ஏற்பட்டால் வரக்கூடிய பாதிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளைவிட மிக மோசமான பாதிப்புகளை அடுத்தடுத்து வரும் என்றும், 4 மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.
மாநில அரசும் மத்திய அரசும் முன்கூட்டியே பல்வேறு ஆய்வுகளை செய்து, உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.