UK Murder: ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் எந்தளவுக்கு நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த இளம்பெண் ஷ்ரத்தா கொலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் பிரிட்டனில் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை:

நிக்கோலஸ் மெட்சன் என்பவர் தனது மனைவி ஹோலி பிராம்லியை 200 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்திருந்தாலும் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹோலி பிராம்லியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதை சமையலறையில் யாருக்கும் தெரியாமல் ஒரு வாரம் மறைத்து வைத்துள்ளார். பின்னர், தனது நண்பரின் உதவியோடு வெட்டப்பட்ட உடல் பாகங்களை ஆற்றில் அப்புறப்படுத்தியுள்ளார்.

கொலை செய்துவிட்டு காவல்துறை அதிகாரிகளை ஒரு வருடமாக ஏமாற்றி வந்தது அம்பலமாகியுள்ளது. படுக்கையறையில் வைத்து அவரது மனைவியை பலமுறை கத்தியால் குத்தியதும் குளியலறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இளம்பெண்ணின் தாயார் பரபரப்பு வாக்குமூலம் :

பின்னர், அந்தத் துண்டுகளை பிளாஸ்டிக் பைகளில் போட்டு, பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். கொலை நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு தனது நண்பரின் உதவியோடு உடலை அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக, தனது நண்பருக்கு 50 யூரோக்களை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடைபயிற்சிக்கு செல்பவர் ஒருவர், விடம் ஆற்றில் பிளாஸ்டிக் பைகள் மிதப்பதை கண்டுள்ளார். ஒரு பையில் மனித கையும், மற்றொரு பையில் பிராம்லியின் வெட்டப்பட்ட தலையும் இருந்துள்ளது. ஆனால், 224 உடல் பாகங்கள் இன்னும் மாயமாகவே உள்ளது. மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உடல் வெட்டப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்,

நீதிமன்றத்தில் பிராம்லியின் தாயார் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். தனது மகளுக்கு திருமணமாகி 16 மாதங்களே ஆனதாகவும் அந்த கொடூரன் (கணவன் மெட்சன்) தன்னை சந்திக்க விடாமல் தனது மகளை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகளை துடிதுடிக்க கொலை செய்த கொடூரன்:

இருவரும் பிரியும் தருவாயில் இருந்ததாகவும் அந்த சமயத்தில்தான் தனது மகனை மெட்சன் கொலை செய்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். பிராம்லியின் செல்லப்பிராணியான எலியை மெட்சன் மிக்ஸியில் போட்டு துடிதுடிக்க கொன்றுள்ளார். பின்னர், அதை மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

அதுமட்டும் இன்றி, பிராம்லியின் நாய்க்குட்டிகளை வாஷிங் மெஷினில் போட்டு கொன்றுள்ளார். இதை அறிந்த பின், பிராம்லி தனது முயல்களுடன் வீட்டில் இருந்து தப்பி சென்று காவல்துறை உதவியை நாடியுள்ளார். இதை விசாரிக்க காவல்துறை அதிகாரிகள், மெட்சனின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, தனது மனைவிதான் தன்னை கொடுமைப்படுத்தியதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கணவரிடம் இருந்து தப்பிக்க பிராம்லி பல முறை முயற்சி செய்துள்ளார். இறுதியில்தான், கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. மனைவியை கொலை செய்ததற்காக மெட்சனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.