ஜோசப் விஜய் அரசியல் அடிப்படை அறிவு இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார் என்றும், கிறிஸ்தவ மாப்பியாக்கள் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள் என்றும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கோயில்களில் செங்கோலை முன்னிறுத்தி சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச்.12) வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் வழிபாடு நடத்தியவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
“நேற்று மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை நான் வரவேற்கிறேன். CAA வால் எந்த இஸ்லாமியருக்கு பாதிப்பு உள்ளது? புதியதாக கட்சி தொடங்கியுள்ள ஜோசப் விஜய் அரசியல் அடிப்படை அறிவு கூட இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார். அவருக்கு யார் எழுதிக் கொடுக்கிறார்கள். கிறிஸ்தவ மாப்பியாக்கள் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள். விஜய்யின் அறிக்கையை நான் கண்டிக்கிறேன்” என்றார்.
மேலும் “இலங்கைத் தமிழர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள். அவர்களுக்கு இங்கேயே குடியுரிமை கொடுப்பதால் பாதிக்கப்படுவார்கள். வேண்டுமானால் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுப்பது அவசியம். அதை பாஜகவிடம் நாங்கள் வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வருகிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போதை மாபியா, லாட்டரி மாபியா மற்றும் சாராய மாபியா போன்றவர்களின் பணத்தில் தான் திமுக தேர்தலை சந்திக்கப் போகிறது. திமுக இப்போதே பணத்தை பதுக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் திமுக ஆட்சியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும், திராவிட மாடலை நாம் முறியடிக்க வேண்டும்.
மோடிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எங்கள் இரண்டு லட்சம் தொண்டர்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்கள். ஒரு கோடி பரிசு அறிவிக்கிறேன். CAA வால் இந்திய அல்லது தமிழ்நாடு இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கிறதா என யாராவது நிரூபித்தால் ஒரு கோடி பரிசு கொடுக்கிறேன்.
கடந்த முறை பணம் விளையாடியதால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வேலூரில் நிறுத்தப்பட்டது. மணல் கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து தான் திமுக கதிர் ஆனந்த் தேர்தலை சந்திக்கிறார்” என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
மேலும் காண