திரிபுராவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிபதி ஒருவரே பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட அமர்வு நீதிபதி கௌதம் சர்க்கார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

என்ன நடந்தது..?

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற அறையில் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஒருவரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி 26 வயது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் வந்துள்ளார். அப்போது, நீதிபதியின் அறைக்குள் நுழைந்த நீதிபதி, பாதுகாவலரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு கதவை உள்ளே இருந்து பூட்டினார்.

நீதிபதி அந்த பெண்ணிடம் சம்பவத்தை விவரமாக கூறுமாறு தெரிவிக்க, அப்போது இளம் பெண் விவரிக்க தொடங்கியுள்ளார். அப்போது, நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நீதிபதி, அந்த பெண்ணை திடீரென எழுந்து நிற்க சொல்லியுள்ளார். அந்த இளம்பெண் எழுந்து நின்றபோது, நீதிபதி அவரை பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, வீடு திரும்பிய இளம்பெண் தனது கணவரிடம் முழு விஷயத்தையும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக எழுதி அந்த புகாரை வழக்கறிஞர் சங்கத்தில் சமர்ப்பித்தார். அதேநேரம், இந்த சம்பவத்தில் நீதிபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விசாரணை:

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், “ நான் ஒரு கூலித் தொழிலாளி. ஒரு நீதிபதியே எங்களை இப்படி தவறாக நடத்தினால், மக்கள் எப்படி நீதியை பெற முடியும்? இது மிகவும் கொடுமை” என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார் மற்றும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ் ஆகியோர் உடனடியாக கமால்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவும் கமால்பூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தது. அந்தக் குழு அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் மீதான நிலைப்பாட்டை கேட்டது. பார் அசோசியேஷன் செயலாளர் ஷிவேந்திர தாஸ்குப்தா கூறுகையில்,” நாங்கள் எங்கள் கருத்தை புள்ளி வாரியாக குழு முன் முன்வைத்துள்ளோம்.” என தெரிவித்தார்.

நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திரிபுரா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் வி பாண்டே கூறுகையில், ”இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ புகார் எதுவும் இதுவரை வரவில்லை. மற்ற மாநில மக்களைப் போலவே நானும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இருந்து இதைப் பற்றி அறிந்தேன். முறையான வடிவத்தில் புகார் கிடைத்தவுடன், நாங்கள் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.