Tn Bus Strike All Buses Are Running As Usual In Tiruvannamalai District As Of Morning | Bus Strike: ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குகிறதா?

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
 
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

 
தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை
 
ஜன.9-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதலே வேலை நிறுத்தம் நடைபெற துவங்கி உள்ளது.

 
 
திருவண்ணாமலை  மாவட்டத்தின் நிலை என்ன ?
 

இந்த நிலையில்,போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை  மாவட்டத்தில் மொத்தம் 10 பணிமனைகள்  உள்ளது அதில்  சுமார் 850 பேருந்துகள் உள்ள நிலையில் போக்குவரத்து ஊழியா்களான டிரைவா்,கண்டக்டா் உட்பட சுமாா் 700 போ் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இதனால் சென்னை  , செங்கம் , காஞ்சிபுரம், , திண்டிவனம், புதுச்சேரி ,கோயம்பத்தூர் , பெங்களூர் , திருப்பதி,சித்தூா்,வேலூா்,சேலம்,கள்ளக்குறிச்சி , திருப்பத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நள்ளிரவு முதல் செல்லாது என திருவண்ணாமலை  பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தெரிவித்துள்ளது.

வழக்கம்போல் செயல்படும்
 
இருந்தும் அதிகாரிகள் தரப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  90% பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் பணிமனைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம்போல பேருந்துகள் ஓடுமா என மக்கள் அச்சமடைந்தனர். அதேசமயம் தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணிமுதல் 8 மணி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிமனை முன்பு பிற தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் பலத்த காவல்துறை  பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. மேலும் இயக்கப்படும் பேருந்தை தடுக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Source link