TN Assembly: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம் இன்று நடக்கும் நிகழ்வின் போது கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். இதனால் அரசுக்கான செலவுகள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் இந்தியாவில் புதிது அல்ல. சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இவ்வாறு நடக்கும்போது பொதுமக்கள் 2 வாக்குகளை செலுத்த வேண்டும்.

மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தி வருகிறது. இத்திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. அன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று நடந்த 2வது நாள் கூட்டத்தொடரில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம், அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

இப்படியான நிலையில் 3வது நாளான இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிய உள்ள நிலையில் இதனுடன் சேர்த்து மொத்தம்  2 தீர்மானமாக தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால் அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது’ என்றும், இரண்டாவதாக 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டுமென்ற இரண்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட உள்ளது. இவற்றின் மீது விவாதம் நடைபெற்று பின்னர் நிறைவேற்றப்படும்.

Source link