The Madras Principal Sessions Court Has Extended The Judicial Custody Of Minister Senthil Balaji For The 15th Time

கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி சோதனை நடந்த பின் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏறபடவே தனியார் மருத்துவமனையில், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று ஆஜரான செந்தில் பாலாஜி:
இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் டிரங்கு பெட்டியில் தாக்கல் செய்தனர்.
ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்,  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி காட்சி மூலமாக இன்று ஆஜர்படுத்தபட்டார்.
நாளை தீர்ப்பு:
இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 15 வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் ஜாமின் கோரி 3வது முறையாக தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆவணங்களில் அமலாக்க துறை திருத்தம் செய்துள்ளதாக செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் விதிகளை மீறி போலியாக ஆவணங்கள் அமலாக்கத் துறை தயாரித்தும், திருத்தியும் உள்ளது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த  மனு மீதான விசாரணையின் போது, செந்தில்பாலாஜியின் புதிய மனுவில் அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேலும் ஜனவரி 22 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட  வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிராக வரும் 22 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவும், அன்று அவரை நேரில் ஆஜரார்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
 

Source link