Thaipusam 2024 Tomorrow January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். முருகனுக்கு மிக மிக உகந்த நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாப்படுகிறது.
நாளை தைப்பூசம்:
தை மாதத்தில் பௌர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பிறந்தது முதலே தைப்பூச கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாராகி வந்தனர். முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது. பல கோயில்களில் கொடியேற்றத்துடன் ஏற்கனவே தைப்பூச திருவிழா தொடங்கியது.
இந்த நிலையில், நாளை தைப்பூசம் என்பதால் இன்றே முருகன் கோயில்கள் எல்லாம் களைகட்டி காணப்படுகிறது. குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மற்ற அறுபடை வீடுகளை காட்டிலும் தைப்பூச தினத்தில் பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
களைகட்டும் முருகன் கோயில்கள்:
இதனால், பழனி உள்பட முருகன் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டு வந்தது. தைப்பூசத்திற்காக பல பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு ஏராளமான பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பிரபலமான முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குவியும் பக்தர்கள், சிறப்பு ஏற்பாடுகள்:
தலைநகர் சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவியத் தொடங்குவார்கள் என்பதால் போலீசார் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் மட்டுமின்றி சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிவார்கள் என்பதாலும், சிவபெருமான் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும் என்பதாலும் அங்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.
நாளை முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற மலேசியா முருகன் கோயிலிலும் நாளை லட்சக்கணக்கான முருக பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அங்கும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும் படிக்க: பிரம்மபுரீஸ்வரர் கோயில் தைப்பூச விழா கோலாகலம்.. திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..
மேலும் படிக்க: Thaipusam 2024: பழனியில் களைகட்டும் தைப்பூசத் திருவிழா; பக்தி பாடல்கள் பாடியபடி குவிந்து வரும் பக்தர்கள்

Source link