ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்த அணிகளில் ஒன்றாக உள்ள அணி தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இதுவே சீசனின் கடைசி ஆட்டமாகும். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 13 தோல்விகளை சந்தித்தும் எட்டு போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ். இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்த இரு அணிகளும் ப்ரோ கபடில் லீக்கில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. கடைசி மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியிலும் பெங்கால் வாரியர்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த சீசனின் தொடக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 48 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளும் எடுத்தது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மனிந்தர் சிங் மட்டும் 16 புள்ளிகள் சேர்த்தார். ஷுபம் ஷிண்டே 11 புள்ளிகளும் நிதின் குமார் 7 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

அதேபோல் 9வது சீசனில் கடைசியாக மோதிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ள கோர் டீம் எனப்படும், நரேந்தர், அஜிங்கியா பவார் மற்றும் சாகர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இந்த போட்டி சீசனின் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் முடிக்க தீவிரமாக உள்ளன.