தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் நடவடிக்கை பற்றி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்..? கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அமைச்சர் ரகுபதியின் முழு பேட்டி:
ஆளுநர் உரையுடன் இன்று சட்டப்பேரவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்தின் விதிமுறைகளின்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்தார்கள். கேரள ஆளுநர் இரண்டு வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். அதேபோல், நம்முடைய தமிழ்நாடு ஆளுநரும் அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட வாசிக்கவில்லை.
தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல், அவரது சொந்த கருத்துகளை மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளார். அரசின் உரையில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் கேட்டு தெரிந்துகொண்டு இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக்கு மாறாக இருக்கிறது, பொய்யாக இருக்கிறது என்று கூறுகிறார். இதற்கும் நாங்கள் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவமும், தாங்கிக்கொள்ளும் சக்தியும் ஆளுநருக்கு இல்லை.
இந்தியாவில் தமிழ்நாடு அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு விளையாட்டு போட்டிகளில் கூட 5வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறோம். அதேபோல், பல துறைகளில் முதலிடத்தில் வந்து இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல், படிக்க மனம் இல்லாமல் இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லை என தெரிவித்து பொய்யான கருத்துகளை கூறி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
ஆனால், தமிழகம் அனைத்து இடங்களிலும் முதலிடத்தில் உள்ளது என்பதை புள்ளிவிவரங்களுடன் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆளுநர் உரையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தால் தந்திருப்போம். தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது.
மேலும் காண