Tamil Cinema Re-Release Culture: தமிழ் சினிமாவின் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் வாடிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா:
”பான் இந்தியா” என்ற பெயரில் இந்தியா சினிமாக்கள் தற்போது வெளியானாலுமே, வணிகம் மற்றும் மொழி என பல்வேறு கூறுகளின் அடிப்படையில் நம் நாட்டின் திரைத்துறைகள் பிரிந்து தான் இருக்கின்றன. அதில் தமிழ் சினிமா துறைக்கு என எப்போதும் மிக முக்கிய இடமுண்டு. காரணம் வணிக ரீதியான மசாலா படங்கள் மட்டுமின்றி, சமூக சீர்திருத்தங்களுக்கான படங்கள், அனைவருக்கும் சொல்லப்பட வேண்டிய கதைக்களங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் தரமான படைப்புகளை தமிழ் சினிமா தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் காரணமாக தான் மொழி என்ற எல்லைகளை கடந்து, வட இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தமிழ் சினிமாக்கள் கொண்டாடப்படுகின்றன. வணிக ரீதியிலும் இந்திய திரைத்துறைக்கு பெரும் லாபத்த ஈட்டி தருகின்றன.
ரீ-ரிலீஸ் கலாச்சாரம்:
என்ன தான் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புதுப்படங்கள் வெளியானாலும், எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி போன்ற மறைந்த பெரும் நடிகர்களின் படங்கள், அவர்களது பிறந்தநாள் உள்ளிட்ட தினங்களில் மெருகூட்டப்பட்டு திரையரங்குகளில் வெளியாவது வாடிக்கையாக உள்ளது. அதுவும் ஒரு சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே அந்த படங்கள் வெளியாகும். ஆனால், அண்மை காலமாக தற்போதைய நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் வாடிக்கை அதிகரித்துள்ளது.
ரீ – ரிலீஸ் படங்கள் லிஸ்ட்:
3, பாபா, அண்ணாமலை, திருமலை, காதலுக்கு மரியாதை, பில்லா, வாலி, யாரடி நீ மோகினி, சிவா மனசுல சக்தி, வாரணம் ஆயிரம், ஷாஜகான், சிட்டிசன், 96, விண்ணை தாண்டி வருவாயா, ஆளவந்தான், விருமாண்டி, கோ, கில்லி, வேட்டையாடு விளையாடு, வேலையில்லா பட்டதாரி, பாட்ஷா, மயக்கம் என்ன மற்றும் சீதா ராமம் என பட்டியல் நீள்கிறது. இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து, அடுத்தடுத்து பல்வேறு படங்களையும் ரீ ரிலிஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் மும்முரம் காட்டி வருகின்றன.
காரணம் என்ன?
ஆங்கில திரையுலகில் ரீ-ரிலிஸ் என்பது பன்னெடுங்காலமாக உள்ள கலாச்சாரம். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி கிடையாது. அண்மைக்காலமாக தான் இந்த ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து வரும் தமிழ் சினிமாக்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியானால், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக செல்வதுடன், மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்ப்பதும் வாடிக்கையாக இருந்தது. அந்த அளவிற்கு தரமான சினிமாக்கள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கான விமர்சனங்கள் என்பது, “ஒருமுறை பார்க்கலாம் ப்ரோ” என்பது மட்டுமே ஆகும்.
இதெல்லாம் எங்கே?
ரீ-ரிலிஸ் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்டு இருந்த பதிவில், மீண்டும் மீண்டும் பார்க்கும் படியான ஒரு படத்தை எடுக்க மாட்றிங்க. உருப்படியா ஒரு ஆல்பம் ஒரு பாட்ட குடுக்க மாட்றிங்க. பாட்டுல நல்ல வரிகள எழுத மாட்றிங்க. நல்ல பாடகர பயன்படுத்த மாட்றிங்க. பாட்டோட சூழலுக்கு ஏத்த லைவ் லொகேஷன் போக மாட்றிங்க. எந்த படத்துலயும் முன்ன மாறி காதல் இல்ல, நகைச்சுவை இல்ல, செண்டிமெண்டல் காட்சிகள் இல்ல. கருத்தான கதை இல்ல. எப்போ பாரு ரத்தமும், துப்பாக்கிகளுமா இருக்கு. இதனாலயே ஊர்ல இருக்க எல்லா தியேட்டரிலும் பழைய படத்த போட்டு போனி பன்றானுங்க. இசை கச்சேரிகள் அதிகமாகிடுச்சு. இரவானாலே 90s – 20s பாட்ட போட்டு இதோட அருமை தெரியுமானு 60 வயசு கிழவன் மாறி பேச ஆரமிச்சுட்டோம். புரிஞ்சுகோங்கயா இதெல்லாம் நல்ல சினிமா ஓட அழிவு. அடுத்த தலைமுறைக்கு கடத்துற மாதிரி நல்ல படம் நல்ல பாட்டுலாம் குடுங்க”என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த படங்களுக்கு ஆதரவு?
மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் என்பது கோரிக்கைகள் அல்ல. ஒரு பெரும் கூட்டத்தின் உண்மையான ஆதங்கம். கதைக்களத்துடன் தங்களை பொருத்தி பார்க்கும் வகையிலான படங்கள் தான் தமிழ் சினிமாவில் எப்போது பெரும் வெற்றி பெறுகிறது. அதற்கு சான்றாக தான் ரீ ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்கள் நல்ல வசூலை ஈட்டுகிறது. அப்படிபட்ட கதைகள் அந்த படங்களில் சொல்லப்பட்டன. ஆனால், சமீப காலங்களாக வெளியாகும் பெரும்பாலான படங்கள் என்பது ரசிகர்களுடன் ஒட்டாத கதைக்களங்களாகவே உள்ளன. இதனை புரிந்துகொண்டதால் திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் “நாஸ்டால்ஜியா” என்ற வெற்று வார்த்தையை கூறி, பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர்.
இயக்குனர்களிடம் சரக்கு இல்லையா?
இன்றைய தேதிக்கு திரைத்துறையின் முக்கிய கதைக்களங்கள் என்பது துப்பாக்கிகளை ஏந்தி கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, பழிக்குப் பழி வாங்க ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டையிடுவது, எதிர்மறையான கருத்துகள் நிறைந்த கதைக்களம், உள்நோக்கம் கொண்ட அரசியல் படங்கள், நட்சத்திர நடிகர்களை வைத்து மசாலா படங்களை எடுப்பது, முதிர்ச்சித் தன்மை என கூறிக்கொண்டு அநாகரீகமான கருத்துகளையும், காட்சிகளையும் கதையில் நுழைப்பது போன்றவை மட்டுமே ஆகும். இப்படிபட்ட படங்களை எடுத்தால் யார் தான் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பார்கள்.
சின்ன படங்கள் பாவமில்லையா?
தமிழ் சினிமா என்ன தான் பெரும் பட்ஜெட் படங்களை தயாரித்து, கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்தாலும் அதன் முதுகெலும்பு என்பது சிறு பட்ஜெட் படங்களே. ஆனால், நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்கள் அனைத்து வேலைகளும் முடிந்தும், இன்னமும் கூட வெளியாக முடியாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன. இதற்கான பல காரணங்களில் போதிய அளவு திரையரங்குகள் கிடைக்காததும் முக்கிய காரணமாகும். ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு கிடைக்கும் திரையரங்குகள் கூட, சிறு பட்ஜெட் படங்களுக்கு கிடைப்பதில்லை. லாப கணக்குகளை மட்டுமே பார்க்காமல், சிறு பட்ஜெட் படங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்கள் வாய்ப்பளித்தால், பல நல்ல, தரமான திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
மேலும் காண