ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ளனர். இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், சமீபத்திய ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார். அதே நேரத்தில் தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆறாவது இடத்தை அடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் அக்சர் படேல் 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும், 16 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம், டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார்.

பேட்டிங் தரவரிசை:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் யஷஸ்வி விளையாட முடியவில்லை. இரண்டாவது டி20யில் களமிறங்கிய அவர், 68 ரன்கள் குவித்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இதன்மூலம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏழு இடங்கள் முன்னேறி 739 ரேட்டிங் புள்ளிகளுடன் டாப்-10க்குள் நேரடியாக நுழைந்து ஆறாவது இடத்தை பிடித்தார். இதற்கிடையில், இடது கை பேட்ஸ்மேன் ஷிவம் துபே 60 மற்றும் 63 ரன்கள் என்ற தொடர்ச்சியான அரை சதங்களால் 265 வது இடத்தில் இருந்து 58 வது இடத்திற்கு முன்னேறினார்.

இந்திய அணியை சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் இப்போது டாப்-10க்குள் உள்ளனர். தரவரிசையில் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சூர்யா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. இருப்பினும், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 இடங்கள் முன்னேறி 60வது இடத்தையும், இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா 3 இடங்கள் முன்னேறி 61வது இடத்தையும் அடைந்துள்ளனர்.

பேட்டிங் தரவரிசை பட்டியல்:

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் பில் சால்ட் 802 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 775 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 763 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் ஒரு இடத்தை இழந்து 755 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாக் ஆறாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ரிலே ரூசோ ஏழாவது இடத்திலும் உள்ளனர். அவர் 689 புள்ளிகள் பெற்றுள்ளார். இங்கிலாந்து கேப்டன் பட்லர் 680 ரேட்டிங் புள்ளிகளுடன் எட்டாவது இடத்துக்கும், கெய்க்வாட் 661 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்துக்கும் சரிந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 660 ரேட்டிங் புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:

பந்துவீச்சு தரவரிசையில் இங்கிலாந்தின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அடில் ரஷித் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸின் அகில் உசேன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவி பிஷ்னோய் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி 21வது இடத்தைப் பிடித்துள்ளார்.