கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கி, அங்கு அயோத்தி கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, அயோத்தி வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரா மசூதி வழக்கு பூதாகாரமாக வெடித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் இடத்தில் பகவான் கிருஷ்ணர் பிறந்ததாக இந்துக்கள் சிலர் நம்புகின்றனர்.

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கால் சர்ச்சை:

எனவே, மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்து அமைப்புகள் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆய்வு மேற்கொள்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய தரப்பு ஆட்சேபனை தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

அனுமதி வழங்கியது மட்டும் இன்றி, ஆணையம் ஒன்றை அமைத்து, அதற்கு தலைவராக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து அவரின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டது. இச்சூழலில், ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மசூதி தரப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, "ஷாஹி இத்கா மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு" தடை விதித்துள்ளது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு:

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து பேசிய உச்ச நீதிமன்றம், "எதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்பதை மனுதாரர் தெளிவாக கூறவில்லை. எதற்காக என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். இது தவறு. நீங்கள் எதற்காக ஆணையம் அமைக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாகக் கூற வேண்டும். அதை நீதிமன்றத்திற்கு விட்டுவிடுகிறீர்கள்" என தெரிவித்தது.

முன்னதாக, நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தஸ்னீம் அகமதி, "வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991இன் படி, ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. எனவே, உயர்நீதிமன்றம் இப்படி உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது" என்றார்.

கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் 13.37 ஏக்கர் நிலம், தனக்கு சொந்தம் எனக் கோரி லக்னோவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மசூதியை இடிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 1669-70களில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு அருகில் உள்ள கத்ரா கேசவ் தேவ் கோயிலின் 13.37 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.