Senthil Balaji’s bail plea is coming up for hearing in the Madras High Court today as he resigned from the post of minister


அமைச்சர் பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்த நிலையில் செந்தில் பாலாஜியின் பிணை மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி செய்யப்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அவர் மீது அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் 8 மாத காலமாக எந்த துறையும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் அமைச்சராக இருக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அமைச்சர் பதவி நீடித்து வந்தது. இந்த சூழலில் நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், இன்று அவர் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமைச்சராக இருந்த போது, ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சியை கலைக்கக்கூடும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று பிணை மனு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
 

மேலும் காண

Source link