ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…

ஆந்திராவில் சோதனை முயற்சியாக ஆற்று நீரில் இயக்கப்படும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

விமான சேவை என்றாலே, அதற்கு விமான நிலையம், ஓடுதளம் என ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக பெரும்பாலும், விவசாய நிலங்களையே அரசுகள் கையகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில், விமான நிலைய திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக அப்படி ஒரு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் விமான நிலையம், ஓடுதளம் என எதுவும் இல்லாமல், ஆற்றில் விமானங்களை இயக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடல் விமானம் என்ற அந்த விமானத்தை, ஆற்றில் தரையிறக்கி, ஆற்றிலேயே ஓடுபாதையாக பயன்படுத்தி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை இயக்கப்படும் இந்த கடல் விமானத்திற்கான சோதனை ஓட்டம், விஜயவாடா பிரகாசம் அணையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்துகிறார்.

https://x.com/ANI/status/1855120699264040961

இந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால், அதன்பின்னர், கடல் விமானம் என்ற இந்த விமானம், ஆற்றிலேயே இறங்கி, ஏறி பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், மேற்கொள்ளப்படும் இந்த புதிய திட்டம் வெற்றி அடைந்தால், பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.