Sachin Tendulkar Makes Stance Clear Amid Maldives Controversy Says Explore Indian Islands

லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 
ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்றும் மாலத்தீவு எம்பி கூறியிருந்தார். இதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
பரபரப்பை கிளப்பி வரும் மாலத்தீவு விவகாரம்:
இதை தொடர்ந்து, எம்.பி-யின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், “லட்சத்தீவை மற்றொரு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் நோக்கில் மாலத்தீவின் மீதான கவனத்தை லட்சத்தீவின் மீது திசை திருப்ப பார்க்கிறது இந்தியா” என்றார். 
எம்.பி. ஜாஹித் ரமீஸ், மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் வரிசையில் மற்றொரு அமைச்சரான மரியம் ஷியூனா, இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசினார். மாலத்தீவு எம்பியும் அமைச்சரும் தெரிவித்த கருத்து இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், மாலத்தீவுக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள தீவுகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட தொடங்கினர். அதோடு நின்றுவிடாமல், Boycott Maldives எனும் ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
முந்தி கொண்டு கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்:
இந்த நிலையில், ”இந்தியாவில் சுற்றி பார்ப்பதற்கே பல அழகான கடற்கரைகளும் பழமையான தீவுகளும் இருப்பதாக” இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தன்னுடைய 50ஆவது பிறந்துநாளுக்கு மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்துக்கு சென்றதை குறிப்பிட்டு பேசிய சச்சின், “எனது 50ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக சிந்துதுர்குக்கு சென்று250+ நாட்கள் ஆகிவிட்டது.
கடற்கரை நகரம் நாங்கள் விரும்பும் அனைத்தையும் வழங்கியது. அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை எங்களிடம் விட்டுச் சென்றன. அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது “அதிதி தேவோ பவ” தத்துவத்தின் மூலம், இந்தியாவில் செல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. பல நினைவுகள் உருவாக்க காத்திருக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

250+ days since we rang in my 50th birthday in Sindhudurg! The coastal town offered everything we wanted, and more. Gorgeous locations combined with wonderful hospitality left us with a treasure trove of memories.India is blessed with beautiful coastlines and pristine… pic.twitter.com/DUCM0NmNCz
— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2024

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம் குறித்து ஒரு முறை கூட பேசாத சச்சின் டெண்டுல்கர், மாலத்தீவு விவகாரம் பேசுபொருளானதை தொடர்ந்து, இந்திய தீவுகள் குறித்து பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>

Source link