மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தால் 3,500 சாலை பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க கூடாது, இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அம்சராஜ், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தால் 3,500 சாலை பணியாளர்கள் பணி இழக்க நேரிடும் என்றார்.
கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் என்றும், மாநில நெடுஞ்சாலையில் தனியார் முதலாளிகள் சுங்கவரி வசூல் கொள்ளை நடக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.
எனவே நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பணியில் உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் குடும்ப நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.