தன்னுடைய இறப்புக்குப் பிறகு, தான் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
வயது மூப்பு காரணமாக முதுபெரும் அரசியல் தலைவரும் எம்ஜிஆர் கழக நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.
1926ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் கொண்டு, நாடகக் குழுவில் சேர்ந்தார். நிர்வாகத்திலும் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால், நாடக நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டார்.
பின்னாட்களில் பெரியாரின் அறிமுகம் கிடைத்து, அவருக்கு உதவியாளர் ஆனார் ஆர்.எம்.வீ. தொடர்ந்து அண்ணாவின் உதவியாளர் ஆனவருக்கு, எம்ஜிஆரின் அறிமுகமும் கிடைத்தது. நாடகத் துறையில் இயங்கி வந்தவர், எம்ஜிஆர் மூலம் திரைத் துறையிலும் கால் பதித்தார்.
எம்ஜிஆர் மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் சத்யா மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளார். எம்ஜிஆர் நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும், சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
அரசியலிலும் கால்பதித்தார்
அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது வீடியோவை வெளியிட்டு அதிமுக வெற்றிக்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆர், ஜெ. அமைச்சரவைகளில் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார்.
வல்லத்திராகோட்டையில் நினைவிடம்
தான் பிறந்த வல்லத்திராகோட்டையில், தன்னுடைய தாய் தெய்வானை அம்மாவுக்கு சமாதி எழுப்பினார். ஒரு ஏக்கர் அளவு கொண்ட அந்தப் பகுதிக்கு அன்னை தெய்வானை அம்மாள் நினைவு மண்டப வளாகம் என்று பெயரிட்டார். அங்கே இராம.வீரப்பன் அறிவகம்என்ற பெயரில் நூலகம் ஒன்றை அமைத்தார். அதற்கு அருகிலேயே தனக்காக நினைவிடம் ஒன்றை உருவாக்கினார். அங்கேதான் தன்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குடும்பத்திடம் தெரிவித்திருக்கிறார்.
முதல்வரிடம் கோரிக்கை
அண்மையில் முதல்வர் ஸ்டாலின், ஆர்.எம்.வீரப்பனின் 98ஆவது பிறந்த நாளில் சந்தித்துப் பேசினார். அப்போது, ’’நான் இறந்த பிறகு என்னுடைய உடல் சொந்த ஊரான வல்லத்திராகோட்டை கிராமத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்’’ என்று ஆர்.எம்.வீ கோரிக்கை விடுத்திருக்கிறார்.
’’அதெல்லாம் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நன்றாக இருங்கள்’’ என்று சொல்லித் திரும்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆர்.எம்.வீரப்பன் இன்று சென்னையில் காலமானார். அவரின் உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவரின் மகன் வெளிநாட்டில் இருப்பதால், நாளை (ஏப்.10) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காண