இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் உயர்ந்த கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுவது ரஞ்சி டிராபி. இந்த போட்டியில் விளையாடுவதே பல வீரர்களின் கனவாக இருக்கும். ஐபிஎல் போட்டிகள் வருவதற்கு முன்பாக, ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டி இந்தாண்டும் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கிய இந்த ரஞ்சி கோப்பை லீக் போட்டிகளை கடந்து, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஞ்சி கோப்பையில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த காலிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளில் தமிழ்நாடு அணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த காலிறுதி அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.
Presenting the Quarter-finalists of the @IDFCFIRSTBank #RanjiTrophy 🙌Which team are you rooting for 🤔🗓️ 23rd to 27th February📺 @JioCinema💻📱 https://t.co/pQRlXkCguc pic.twitter.com/0tByOrXvFz
— BCCI Domestic (@BCCIdomestic) February 19, 2024
வெளியான அட்டவணை:
ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டிகளின் அட்டவணையை இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இம்முறை கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சௌராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகிய அணிகள் இந்த காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.
அதன்படி காலிறுதி முதல் ஆட்டத்தில் விதர்பா மற்றும் கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இது தவிர மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா அணிகளும், நான்காவது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் – ஆந்திரா அணிகளும் மோத இருக்கின்றன.
ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் எங்கு, எப்போது நடைபெறுகிறது..?
காலிறுதி ஆட்டங்கள் அனைத்தும் வருகின்ற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது.
விதர்பா vs கர்நாடகா, சிவில் லைன்ஸ் ஸ்டேடியம் (நாக்பூர்)
மும்பை vs பரோடா, BKC மைதானம். (மும்பை)
தமிழ்நாடு vs சௌராஷ்டிரா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி (கோயம்புத்தூர்)
மத்தியப் பிரதேசம் vs ஆந்திரப் பிரதேசம், ஹோல்கர் ஸ்டேடியம் (இந்தூர்)
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி எப்போது..?
2024 ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 2-ம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி தொடங்குகிறது. அரையிறுதிக்கு தகுதி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் இரு அணிகளும் மார்ச் 10ம் தேதி மோதுகின்றன. இப்படியான சூழ்நிலையில், இந்த ஆண்டு எந்த அணி ரஞ்சி டிராபியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று அறிய ஆவலாக உள்ளது.