அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள இயக்குநர் மிஷ்கின். "ராமபிரான் பெரிய அவதாரம். அவர் ஒரு காவியத் தலைவன். அவருக்கு கோவில் கட்டியது அழகு" என தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவகர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சதி தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்றது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஆர்.எஸ். எஸ். அமைப்பின் கரசேவகர்கள் செய்தது தவறு எனக் கூறியது மட்டும் இல்லாமல், பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடமான 2.7 ஏக்கர் நிலத்தினை ராமர் கோவில் கமிட்டிக்கு அளிக்கவேண்டும் எனவும், இஸ்லாமியர்களுக்கு தனியாக மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தது. இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக அமைந்தது. அதாவது பாபர் மசூதியை இடித்தவர்களை குற்றவாளிகள் எனக் கூறியது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு பாபர் மசூதி கட்டப்பட்டு இருந்த நிலத்தையும் வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த தீர்ப்பு கட்டப்பஞ்யாயத்து தீர்ப்பு என்ற விமர்சனத்திற்கு ஆளானது.

அதன் பின்னர் ராமர் கோவில் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ராமர் கோவில் கடந்த 22ஆம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்தார். இந்தியா முழுவதும் இருந்து சுமார் 8 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சினிமா பிரபலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள மிஷ்கின் இசையமைப்பாளராக பணியாற்றிய டெவில் திரைப்பட புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கினிடம் ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”ராமர், அல்லா, ஏசு கிருஸ்து, பௌத்தர், குருநானக் ஆகியோர் மனதில் உள்ளனர். அவர்களுக்கு கோவிலும் கட்டலாம். மனதிலும் வைத்துக்கொள்ளலாம். ராமபிரான் ஒரு பெரிய அவதாரம். அவர் ஆகச்சிறந்த காவியத் தலைவன். அது என்னென்னமோ சொல்லுவாங்க. எனக்குத் தெரியாது. எனக்கு பொலிட்டிகலா கருத்து சொல்லத் தெரியாது. அழகு. எல்லாமே இருக்கும் எதிர்ப்பும் இருக்கும் ஆதரவும் இருக்கும்.

ஒரு சினிமாக்காரனா அரசியல் கருத்து சொல்லக்கூடாது என நினைக்கிறேன். சினிமாவில் இருப்பவர்கள் அரசியல் சார்ந்த கருத்துக்கள் சொல்றாங்க. என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான். என் சினிமாவில் வரும் கதாமாந்தர்கள் எல்லா காலகட்டத்திலும் இருக்கும் அரசியலை பேசும். மனித அவலம். பிற மனிதனை அவன் எப்படி நேசிக்க தவறுகின்றான். குடும்பத்தலைவனா மற்றவர்களுக்கு அன்பு எப்படி செலுத்தணும் என்பதுதான் என்னுடைய அரசியலா பார்க்கின்றேன். இதைவிட்டுட்டு சமகால அரசியல் குறித்து நான் பேசக்கூடாதுனு நினைக்கிறேன். நான் அரசியல் குறித்து பேசும் இடம் என்னுடைய ஓட்டு மட்டும்தான்” என பேசினார்.

மிஷ்கினின் இந்த கருத்து குறித்து தற்போது பரவலான பேச்சு ஏற்பட்டுள்ளது.