Railway Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman three new railway economic corridors


இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள மோடி அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு கிடைத்தது என்ன?
இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய திட்டங்களும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 
கடந்த 25 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேத்துறையை நவீனப்படுத்துவதில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்று பெரிய ரயில்வே பொருளாதார வழித்தடங்கள்:
பட்ஜெட் தாக்கலின்போது, இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மூன்று பெரிய ரயில்வே பொருளாதார வழித்தடங்கள் அமைக்கப்படும். ஆற்றல், கனிமம் மற்றும் சிமெண்ட் வழித்தடம், துறைமுக இணைப்பு வழித்தடம், அதிக போக்குவரத்து  வழித்தடம் ஆகியவை அமைக்கப்படும்.
பிரதம மந்திரி கதி சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் பல தரப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை செயல்படுத்துவதற்காக ரயில்வே திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, அதற்கான செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஜிடிபி வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
அதிக போக்குவரத்து வழித்தடங்களில் நெரிசல் குறைவதால், செயல்பாடுகள் மேம்படும். இதன் விளைவாக பயணிகளுக்கு பாதுகாப்பு மேம்படும். பயணிகள் விரைவாக பயணிப்பார்கள். பயணிகளின் வசதிக்காக 4,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்” என்றார்.
கடந்த 2023-24 பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரயில்வே துறைக்கு 1.6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், முதலீடுகள் மூலம் ரயில்வே துறைக்கு 2.45 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. 2023-24 ஆண்டு, பட்ஜெட்டை தாண்டி ரயில்வேத்துறைக்கு மத்திய அரசு மொத்தமாக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. மொத்த முதலீடுகள் மூலம் ரயில்வேத்துறைக்கு 2.6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.
இதையும் படிக்க: Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

மேலும் காண

Source link