விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் புகழ்ழேந்தி. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் புகழேந்தி பதவி வகித்து வருகிறார். 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து புகழேந்தி வீடு திரும்பி இருந்தார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் புகழேந்தியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக எம்.எல்.ஏ புகழேந்திக்கு மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த புகழேந்தி. 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளை செயலாளர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.

அமைச்சர் பொன்முடி அஞ்சலி

திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு செய்தி கேட்டதும் அமைச்சர் பொன்முடி உடனடியாக மருத்துவமனைக்கே வந்தார். அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் கடலூரில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.